முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ் | mudi adarthiyaga vegamaga valara

mudi vegamaga valara
mudi adarthiyaga sikkiram valara easy tamil tipsதலை முடி வளர ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர்.


மேலும் இயற்கை வழி தான் சிறந்தது என்று உணர்ந்து, தற்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமென்று இன்டர்நெட்டில் தேடி அலைகின்றனர்.
குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களானது பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான். ஆண்களே! இதனை சரியாக பின்பற்றி வந்தால், தலை வழுக்கையாவதைத் தடுக்கலாம்.

முடியை ட்ரிம் செய்யவும் 
மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதால் முடியின் வலிமையானது அதிகரிக்கும். எப்படியெனில் முடியானது வளரும் போது, முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, முடியின் ஆரோக்கியமானது பாழாகிறது. இதனால் முடியின் வளர்ச்சியானது குறைய ஆரம்பிக்கிறது. ஆகவே மாதம் ஒருமுறை முடியை லேசாக ட்ரிம் செய்ய வேண்டும்.

ஆயில் மசாஜ் 
முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

முட்டை அவசியம் 
முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.

சீப்புகளை பயன்படுத்தவும் 
சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். எனவே தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் மயிர்கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஹேர் ட்ரையரை தவிர்க்கவும் 
தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும். அதிலும் இதனை தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலர வையுங்கள்.

உருளைக்கிழங்கு மசாஜ் 
முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

நறுமணமிக்க எண்ணெய்கள் 
முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமானால், நறுமணமிக்க எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை மசாஜ் செய்ய வேண்டும்.

வெங்காயச் சாறு 
வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

பீர் வாஷ் 
மாதம் ஒருமுறை ஒரு டம்ளர் பீரைக் கொண்டு, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

வினிகர் 
வினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள். அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.

கண்டிஷனர் வேண்டாம் 
கண்டிஷனர் முடிக்கு நல்லது தான். இருப்பினும் அந்த கண்டிஷனரானது ஸ்காப்பில் பட்டால், அது முடியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கெமிக்கல் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையான கண்டிஷனர்களான தயிரைப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

தினமும் தலைக்கு குளிக்குறீங்களா?
 சிலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள். இப்படி தினமும் தலைக்கு குளித்தால், தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களானது வெளியேறிவிடுவதோடு, முடியானது பொலிவை இழந்துவிடும். ஆகவே முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளித்தால் போதும்.

முடிக்கும் பாதுகாப்பு தேவை
 முடியின் மீது சூரியக்கதிர்களானது நேரடியாக படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், சூரியக்கதிர்களானது மயிர்கால்களைத் தாக்கி, முடி உதிர்வதை அதிகரிக்கும். எனவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அணிந்தோ அல்லது துப்பட்டா கொண்டு சுற்றிக் கொண்டோ செல்லுங்கள்.

ஈரமான முடியில் சீப்பு வேண்டாம்
முடி ஈரமாக இருக்கும் போதோ, தலைக்கு சீப்பு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் முடி ஈரமாக இருக்கும் போது வலிமையிழந்து இருக்கும். அப்போது சீப்பு பயன்படுத்தினால், முடியானது வேரோடு வந்துவிடும். ஆகவே முடி உலரும் வரை சீப்பு பயன்படுத்தாதீர்கள்.

காட்டன் தலையணை உறை வேண்டாமே!
காட்டன் தலையணை உறையைப் பயன்படுத்தினால், முடி அதிகம் உதிரும். ஆகவே சில்க் தலையணை உறையைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

மன அழுத்தத்தைத் தவிருங்கள்
தற்போது மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் அதிகம். அப்படி மன அழுத்தமானது அதிகம் இருந்தால், முடியானது ஆரோக்கியத்தை இழந்து கொட்ட ஆரம்பிக்கும். ஆகவே மன அழுத்தத்தைத் தவிர்க்க உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய ஆரம்பியுங்கள்.

சரியாக சாப்பிடவும் 
காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால் முடியின் வளர்ச்சியும், அடர்த்தியும் அதிகரிக்கும்.

போதிய தூக்கம்
அன்றாடம் 6-7 மணிநேரம் தூக்கமானது அவசியம். அப்படி இல்லாவிட்டால், முடியானது ஆரோக்கியத்தை இழந்துவிடும். எனவே தினமும் போதிய அளவு தூக்கத்தை பின்பற்றி வாருங்கள். முடியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.